காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தில் கருணாநிதியின் பெயரில் திட்டம்.
புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக துணைநிலை ஆளுநர் உரையின்றி, ரூ.9,000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்க இருந்தது. உரையை கால தாமதமாக அனுப்பியதாகக் கூறி, பேரவைக்கு வர துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்தார். வேறு ஒரு தேதியில் பேரவையை கூட்டுமாறு கடிதம் மூலம் கிரண்பேடி கேட்டுக்கொண்டார். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் நாராயணசாமி, மரபுப்படி துணைநிலை ஆளுநர் பேரவையில் உரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இருவருக்கும் இடையே கடிதங்கள் பறந்துகொண்டிருந்த பரபரப்பான சூழலில், இன்று காலை 9.30 மணிக்கு பேரவை திட்டமிட்டபடி கூடியது. 15 நிமிடங்கள் காத்திருந்தும் கிரண்பேடி வராததால், பேரவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து சரியாக 12 மணியளவில் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 2020-21 ஆண்டிற்கான ரூ.9,000 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். மேலும் பட்ஜெட் அறிவிப்பில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச குடிநீர், குடும்பங்களுக்கு 100 யுனிட் இலவச மின்சாரம், பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி காலைச் சிற்றுண்டி மற்றும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மீனவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவி ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்றும், வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் மரணமடைந்தால் ரூ.1 லட்சம் நிவாரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.