லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்த முக்கிய காரணத்தின் முழு விபரம்-வீடியோ..

உலகையே உலுக்கியுள்ள லெபனான் நாட்டின் வெடிப்புவிபத்து சம்பவம் குறித்து விரிவாக இங்கு காண்போம்.

கொரோனாவின் கோர தாண்டவத்தால் மக்களின் வாழ்க்கையில் அவர்களின் விருப்பமின்றியே பல மாற்றங்கள் நடந்துள்ளன. இதுவரை யாரும் காணாத வகையில் உயிரிழப்புகள் சடசடவென உயர்ந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் நேற்று நடந்த வெடிவிபத்து உலக நாடுகளை உலுக்கியுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் மளமளவென பற்றி எரியத் தொடங்கிய தீ, சில நிமிடங்களில் யாரும் எதிர்பாராத வகையில் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இந்தக் காட்சிகளை வீடியோக்களில் பார்த்த நமக்கே நெஞ்சம் பதைபதைத்தது. அப்படி இருக்கையில் அந்த விபத்தை நேரில் எதிர்கொண்ட மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. சாதாரண தீ விபத்து போல் அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தவர்கள் சிறிது நேரத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓட ஆரம்பித்தனர். தீப்பிழம்புகளும், கரும்புகைகளும் அப்பகுதி முழுவதையும் சூழ்ந்திருந்தது.

இந்த கோர விபத்தால் சுமார் 100 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். 4,000க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 20 கி.மீ வரையிலான வானுயர்ந்த கட்டிடங்கள் முதல் அனைத்தும் சுக்குநூறாக நொறுங்கின. முதலில் புகை வருவதை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், இவ்வளவு பெரிய வெடிப்பு சம்பவம் நிகழக் கூடும் என எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது குண்டு வெடிப்பா? அல்லது இயற்கையான வெடி விபத்தா? என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தது. குண்டு வெடிப்பாக இருந்தால் அதற்கான காரணம் என்ன? இல்லையென்றால் இயற்கையான வெடி விபத்தாக இருந்தாலும் இதன் பின்னணியில் மனித தவறுகள் இருக்குமா? இப்படி சத்ததுடன் வெடிப்பதற்கு என்ன காரணம்? என நம்மைச் சுற்றி கேள்விகளாக வலம் வர ஆரம்பித்தன.

இந்நிலையில்தான் அனைத்து கேள்விகளுக்குமான பதில் அளிக்கும் வகையில், முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பல உயிர்களை காவு வாங்கியுள்ள லெபானன் வெடி விபத்துக்கு காரணம் அமோனியம் நைட்ரேட் என கூறுகிறார்கள். பெய்ரூட் சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருளை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த மோசமான விபத்தை மக்கள் சந்திக்க நேரிட்டுள்ளது. இதனால் பரவிய விஷ வாயு அண்டை நாடுகள் வரை பரவியுள்ளது என்றால், அதன் வீரியம் எந்த அளவுக்கு இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள். இதனால் தற்போது அமோனியம் நைட்ரேட் என்ற சொல் ஊடகங்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

இந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி அமோனியம் நைட்ரேட்டுக்கு இருக்கிறதா? இதற்கு ஆம் என்றுதான் பதில் சொல்ல வேண்டும். வெண்மை நிறக படிக வடிவிலான அமோனியம் நைட்ரேட்டானது, நீரில் அதிகம் கரையும் தன்மை கொண்டது. இதனை பொதுவாக விவசாயத்திற்கு நல்ல உரமாக பயன்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் வெடி பொருட்கள் தயாரிப்பதில் முக்கிய பங்கு அமோனியம் நைட்ரேட்டுக்கு உண்டு. கல் குவாரிகள், சுரங்கம் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை வெடிக்க வைப்பதற்கு இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.  இதனை பயன்படுத்த கடும் விதிமுறைகள் பல உண்டு. அவற்றை மீறினால், அது உங்களுக்கு எதிராக செயல்படும் என்பது உறுதி.

அமோனியம் நைட்ரேட்டை பற்ற வைக்கும் போது அது அதிக சத்தத்துடன் வெடித்து விஷ வாயுக்களை வெளியேற்ற வாய்ப்புள்ளது. ஆனால் அதிக வெப்பம் இல்லாமல் இதனை பற்றவைப்பது கடினம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்தே அம்மோனியம் நைட்ரேட்டை சற்று தள்ளியே வைக்க வேண்டும் என்கின்றனர். இதனை எளிதில் பற்ற வைக்க முடியாது என்றாலும், இது பற்றிக் கொண்டால் அருகில் உள்ள பொருட்களையும் எளிதில் எரிய வைக்கக் கூடிய தன்மை கொண்டது. அதனாலேயே அமோனியம் நைட்ரேட்டை எங்கு? எப்படி? சேமிக்க வேண்டும் என பல விதிகள் உள்ளன. லெபனானில் இந்த வேதிப்பொருளால் விபத்து ஏற்பட்டிருப்பது உண்மையென்றால், அதனை பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை அரசு கண்டு கொள்ளவில்லையா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

அமோனியம் நைட்ரேட்டை வெப்பப்படுத்தும் போது அது மிகப்பெரிய அளவில் வெடித்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அப்போது வெளிப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் அம்மோனியா வாயுக்கள் எதிர்பாராத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். இதனால் வெளிப்படும் விஷ வாயுக்கள் நொடியில் உயிரைக் கொல்லும் திறன் கொண்டது. வெடி விபத்து நடக்கும் சில விநாடிகளில் புகை வேகமாக பரவுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. லெபனான் வெடி விபத்தில் இது பற்றி எரிந்ததற்கு என்ன காரணம் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை நீண்ட காலமாக ஒரே இடத்தில் அவற்றை அடைத்து வைத்திருந்ததால் வெப்பம் அதிக அளவில் உருவாகி தானாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

ஆனால் ஒரு சிலருக்கு இது அம்மோனியம் நைட்ரேட்டால் ஏற்பட்ட வெடிவிபத்து தானா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த சம்பவம் வெடிகுண்டு தாக்குதலாக இருக்கும் என அமெரிக்கா அடித்துச் சொல்கிறது. வெடி விபத்தை வீடியோக்களில் பார்க்கையில், அதில் காணப்படும் அடர் சிவப்பு நிற புகை அமோனியம் நைட்ரேட்டுடன் ஒத்துப் போகவில்லை என அமெரிக்க அரசின் ஓய்வுபெற்ற வெடிபொருள் ஆய்வாளரான அந்தோனி மே கூறியுள்ளார். ஒருவேளை அமோனியம் நைட்ரேட்டால் கூட இந்த விபத்து ஏற்பட்டிருந்தாலும், அதனை தவிர இதனை வெடிக்க தூண்டக் கூடிய மற்ற பொருட்களும் அங்கு இருந்திருக்க வேண்டும் என்றும் அவர் சந்தேகத்தை கிளப்புகிறார்.

அமோனியம் நைட்ரேட்டால் ஏற்படும் வெடி விபத்து, அணு குண்டு வெடிப்பு போல் இருந்ததாக பலரும் கூறுகின்றனர். ஆனால் தாக்குதல் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என லெபனான் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றனர். நீண்ட நாட்களாக சேமிப்பு கிடங்கில் இருந்ததால் இயற்கையாகவே தீப்பற்றிக் கொண்டதா? அல்லது தீப்பற்ற வைப்பதற்கான வேறு காரணங்கள் ஏதும் இருந்ததா? என்பது இன்னும் கேள்விகளாகவே நிற்கிறது. அரசின் தீவிர நடவடிக்கைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே வதந்திகளுக்கும், கணிப்புகளுக்கும், சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: